cinema

img

லாபம்.... திரைவிமர்சனம்...

‘இயற்கை’ படம் துவங்கி, இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் தான் இயக்கிய எல்லா படங்களிலும் ஏதாவது ஒரு முக்கியமான செய்தியை மக்களுக்குத் தனது படைப்பின் வாயிலாக சொல்வார். அவர் கடத்தும் செய்தியில் மக்கள் நலனை உள்ளடக்கிய சமூகப் பார்வை இருக்கும்.

பல மாதங்களுக்கு முன்னதாகவே விவசாயிகளையும் விவசாயத்தையும் மையப்படுத்தி ஒரு படம் எடுக்கப்போவதாகக் கூறினார் ஜனநாதன். நல்ல முயற்சி; ஆனால், படம் உங்கள் கையைக் கடித்துவிடக் கூடாது என நான் கூறினேன். நட்டம் வராது எனக் கூறிய ஜனநாதன், அவர் இயக்கிய படத்துக்கு ‘லாபம்’ எனப் பெயரிட்டிருக்கிறார்.பெருவயல் கிராமம் படத்தின் கதைக்களம். விவசாய சங்கத் தலைவராக விஜய் சேதுபதி. விவசாயப் பூமியை கபளீகரம் செய்யும் வில்லனாக ஜகபதி பாபு. நாயகிகளுக்கு முக்கியமான பாத்திரங்கள் அளிக்கப்படவில்லை. விவசாயிகளின் நிலங்களை அபகரிக்கும் கதைக்கருவைக் கொண்டிருக்கும் பல படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. ஆனால், லாபம் வித்தியாசமானது.

ஓர் ஆலை முதலாளி விவசாய நிலத்தில் பயோடீசல் தொழிற்சாலை அமைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முற்படுகிறார். நிலத்திற்கான போராட்டமாக மட்டுமல்லாமல், கூட்டுப் பண்ணை அமைப்பது என்ற உத்தியை இயக்குநர் அறிமுகப்படுத்தியுள்ளார்.  அது உடனடியாக சாத்தியமா என்பது வேறு விஷயம். விவசாயிகளை ஒன்றிணைத்து, விவசாயத்தை அழிக்க நினைப்பவருக்கு எதிராக விவசாயிகளை ஒன்றிணைத்துப் போராட கூட்டுப் பண்ணை ஒரு வடிவமாக அமைகிறது. ஒரு புறம் முதலாளி, மறுபுறம் விவசாயிகள், இந்த இரண்டு பிரிவினருக்கும் இடையே நடக்கக்கூடிய மோதலின் ஊடே, லாபம் என்ற கருத்தை, விஜய் சேதுபதி மூலமாக மக்களுக்குக் கொண்டு செல்கிறார் இயக்குநர்.

‘காலாவதியான உளுத்துப்போன கருத்து’ என்று முதலாளி முன்வைக்கும் விமர்சனத்திற்கு, உழைப்பாளி மக்களின் உழைப்பை சுரண்டுவதில் இருந்து லாபம் எப்படி உருவெடுக்கிறது என்று விவசாயச் சங்கத் தலைவராக வரும் விஜய் சேதுபதி விளக்குகிறார். ரொட்டி உற்பத்தியில் லாபம் எவ்வாறு கிடைக்கிறது என ஒரு சிறுமிக்கு விஜய் சேதுபதி வழங்கும் எளிமையான விளக்கம் மூலம், புரிந்துகொள்வதற்கு சற்று கடினமான விஷயங்களை ஜனநாதன் படம்பார்க்கும் சாமானியர்களுக்குக் கொண்டு செல்ல எடுத்துள்ள முயற்சிகளைப் புரிந்துகொள்ள முடியும்.

மார்க்சின் பங்களிப்புகளிலேயே மிக முக்கியமானது முதலாளித்துவ உற்பத்தி முறையில் உபரி மதிப்பு எங்கிருந்து தோன்றுகிறது என்பதைக்  கண்டறிந்து விளக்கியதுதான். அதுதான் தொழிலாளர்கள் மத்தியில் மிகப் பெரிய சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்தி, சமூக மாற்றத்திற்கான புரட்சியை பல்வேறு நாடுகளில் முன்னெடுக்கத் தூண்டியது. இயக்குநர் ஜனநாதன் உபரிமதிப்பு என்ற மிக முக்கியமான கருத்தை - மார்க்சின் கண்டுபிடிப்பை, வெகுமக்களுக்குப் பரிச்சயமான சொல்லான, ‘லாபம்’ என்றே குறிப்பிடுகிறார். திரை மொழியில் கருத்தியலை விளக்குவதற்கு இந்த மொழியை இயக்குநர் தேர்ந்தெடுத்தது சரியே.1999 ஆம் ஆண்டில், வெனிசுலாவில் தேர்தல் மூலம் வெற்றிபெற்ற சாவேஸ் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கியூப ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில், ’நாங்கள் சோஷலிசக் கொள்கையை அமலாக்கப்போகிறோம்’ என சாவேஸ் பேசி முடித்தார்.

நிறைவாக உரையாற்றிய காஸ்ட்ரோ, சாவேஸ் சொல்வது வரவேற்கத்தக்கது. ஆனால், சோஷலிசத்தை மக்களுக்குப் புரிய வைப்பது கடினமானது என்பதை தனது அனுபவத்தின் மூலம் விளக்கப்போவதாகச் சொல்லி தனது உரையைத் துவக்கினார்.
“நான் அவ்வப்போது சாதாரண மக்களைச் சந்தித்து உரையாடுவது உண்டு. அப்போது நிறைய கேள்விகளை நான் அவர்களிடம் கேட்பேன். ‘நிலச் சீர்திருத்தத்தை நாம் கொண்டு வரவேண்டுமா?’ ‘நாம் வாங்கும் சம்பளத்தில் பாதியை வீட்டு வாடகைக்கே கொடுப்பது சரிதானா?’ ’வங்கிகளை மக்களே உடைமையாகக் கொண்டிருந்தால், நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடுகளை செய்ய முடியும் தானே?’ ’தனிநபர்களின் உடைமையாக இருக்கும் தொழிற்சாலைகளை மக்கள் உடைமையாக்கினால் சரியாக இருக்குமா? - என்றெல்லாம் கேட்பேன். ‘ஆமாம், அதுதான் சரி’ என்பார்கள் மக்கள். அதாவது, ‘தற்போது தனிநபர்கள் லாபம் கொழிப்பதற்காக என இருக்கும்  தொழில்கள் எல்லாம், அடிப்படையில் மக்களின் உடைமையாக, மக்களின் வளர்ச்சிக்காக இருக்க வேண்டும். அப்படித்தானே?’ எனக் கேட்பேன். மக்களும், ‘ஆமாம், ஆமாம், அதுதான் சரி’ என்பார்கள். ‘அப்போது சோஷலிசம் தானே வேண்டும்?’ என நான் கேட்டால்,  ‘இல்லை…இல்லை…சோஷலிசம் கூடாது’ என்பார்கள். கம்யூனிசத்தை விடுங்கள்! சோஷலிசம் என்ற வார்த்தையே இங்கு அச்சுறுத்தும் வார்த்தையாக ஏகாதியபத்தியவாதிகள் உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். இவைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு சாவேஸ் பணியாற்ற வேண்டும்’’ என உரையாற்றினார் காஸ்ட்ரோ.

முதலாளித்துவ முறை, ஊடகங்களை எல்லாம் தனது பிரச்சார வாகனங்களாகப் பயன்படுத்தி, பொதுவுடைமைக்கும், சோஷலிசத்துக்கும் எதிரான பிரச்சாரத்தை பல ஆண்டுகளாக மேற்கொண்டுவரும் சூழலில், மார்க்சிய, சோஷலிச, கம்யூனிசக் கருத்துகளை மக்களுக்குக் கொண்டு சென்று, அவற்றில் மக்களுக்குப் பிடிப்பை ஏற்படுத்துவது மிகச் சவாலான பணி. அப்பணியை லாபம் திரைப்படத்தின் மூலம் செய்து காட்டிய தோழர் எஸ்.பி. ஜனநாதனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இருப்பினும் ஒரு கடினமான பிரச்சனையை திரைப்படத்தின் மூலமாக மக்களுக்கு எடுத்துச் செல்கிறபோது, இப்பிரச்சனையைக் காட்சிப்படுத்துவதில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இயக்குநர் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். எனினும், தமிழில் இதுவரையில் எந்த இயக்குநரும் உபரிமதிப்பு- லாபம் என்பதைக் கருப்பொருளாக வைத்து படம் எடுத்ததில்லை. ‘இயற்கை’  படத்தில் துவங்கி ‘லாபம்’ படம் வரையில் தனது படங்களில் சமூகப் பார்வையுள்ள செய்தியை மக்களுக்கு எடுத்துச் சென்ற இயக்குநர் ஜனநாதன் நம்மிடையே இல்லை என்பதுதான் நம்முடைய வருத்தமெல்லாம்.லாப நஷ்டக் கணக்குப் பார்க்காமல் அனைவரும் பார்க்க வேண்டிய படம் லாபம்.

தொகுப்பு :  : ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)  

;